×

தொடர் போராட்டம், நெருக்கடிகளால் விரக்தி பதவி விலக கோத்தபயா ரெடி? மேலும் 3 எம்பி.க்கள் ஆதரவு வாபஸ்

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. போதிய அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் உணவு பொருட்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்க முடியாத அளவுக்கு, இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் திண்டாடுகின்றனர். பொருட்களை வாங்க பல மணி நேரம் நீண்ட வரிசையில் நிற்க நேரிடுகிறது. மின் தட்டுப்பாடு காரணமாக 13 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு காரணமான ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் அதிபர் மாளிகை முன்பு கடந்த 9ம் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த எம்பிக்கள் பலம் 225. இவர்களில் 156 எம்பிக்களின் பலத்தை ஆளும் கட்சி வைத்துள்ளது. இவர்களில்  எம்பி.க்களில், ஆளும் கட்சியை 39 எம்பி.க்கள் மகிந்த ராஜபக்சே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சமீபத்தில் விலக்கிக் கொண்டனர். மேலும், இதனால், அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இதனால், அதிபர் கோத்தபயாவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் கடும் நெருக்கடியில் உள்ளனர். இவர்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில், அடக்குமுறையை கையில் எடுத்துள்ளனர். கேகாலை மாவட்டம், ரம்புக்கன பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று முன்தினம் ஒருவர் பலியானார். மேலும், 13 பேர் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர்.  

இது தவிர, 15 போலீசாரும் காயமடைந்தனர். இதையடுத்து, ரம்புக்கன பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. `போராட்டக்காரர்கள் 33,000 லிட்டர் கொள்ளவு கொண்ட டீசல் டாங்கை தீ வைக்க முயன்றனர். இதனை தடுக்கவே, எச்சரிக்கைக்காக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க 3 பேர் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது,’ என்று பாதுகாப்பு அமைச்சர் ஜகத் ஆல்வி தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் இலங்கை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகரிக்க செய்துள்ளது. இதனால், தலைநகர் கொழும்புவில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி ஒரு வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே, 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இலங்கையில் பதவியேற்றுள்ளது. இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் இடம் பெறவில்லை.

இந்நிலையில், ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளித்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் கட்சியை சேர்ந்த எம்பி.யான பைசல் காசிம் உட்பட மேலும் 3 எம்பி.க்கள் தங்கள் ஆதரவை நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால், ராஜபக்சே அரசின் பலம் மேலும் குறைந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த 2020ம் ஆண்டில் அதிபருக்கு அதிக அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பின் 20-வது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தவர்கள். இவர்கள் எதிர்க்கட்சிகளின் சமகி ஜன பாலவிகயா கூட்டணியில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசா, ‘அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகர் மகிந்த அபேகுணவர்த்தவிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்து இருக்கிறார். அதற்கு நாங்கள் தயார். கோத்தபயா பதவி விலகும்படி நாங்கள் கோருகிறோம்,’ என்று கூறினார். இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அபேகுணவர்த்தன, ``சஜித் பிரமேதாசா பொய் சொல்கிறார். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக தயாராக இருப்பதாக, கூட்டணி கட்சித் தலைவர்களிடம் நான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றன.

இதில் துளி கூட உண்மையில்லை. யாருக்கேனும் பெரும்பான்மை இருந்தால் அவர்களிடம் பொறுப்பை வழங்க அதிபர் தயாராக இருப்பதாக மட்டுமே கூறினேன்,” என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சஜித் பிரேமதாசா, ``நீங்கள் கூறியதை திரித்து கூற நான் ஒன்றும் முட்டாள் அல்ல. உங்களது கூற்றை மறுக்காதீர்கள். நீங்கள் ஒரு பச்சை பொய்யர்,’’ என்று கூறினார். ஆனால், சபாநாயகர் இதனை மறுத்துள்ளார். எதிர்க்கட்சிகளும் சபாநாயகர் பொய் சொல்வதாக கூறியுள்ளன. இதனால், இலங்கை அரசில் நிகழும் அடுத்தடுத்த மாற்றங்கள் என்னவாக இருக்குமோ? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் இன்று 13வது நாளை எட்டுகிறது.

* உதவ தயார்
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நிதிய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இலங்கையின் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரியை உலக வங்கியின் துணை தலைவர் ஹர்ட்விக் ஸ்காபர் சந்தித்து பேசினார். அப்போது, முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு அவசர உதவி வழங்க உலக வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

* கடனுதவி பற்றி வாய் திறக்காத சீனா
இதுநாள் வரை இலங்கை கேட்ட கடன் உதவி குறித்து எதுவும் பதிலளிக்காத சீனா, நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ தயாராக இருப்பதாக அந்நாட்டின் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் சூ வெய் தெரிவித்தார். இப்போதும், சீனாவிடம் இலங்கை கேட்ட அவசர கடன் உதவி தொகை குறித்தோ, இலங்கை செலுத்திய தொகையை மீண்டும் கடனாக அளிப்பது பற்றியோ சீனா வாய் திறக்கவில்லை.

* உலக நாடுகள் கண்டனம்
ரம்புக்கன பகுதியில் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இதற்கு, ஐநா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு நேற்றும் நீடித்தது. காயமடைந்தவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Gotabhaya , Gotabhaya ready to resign in frustration over series of struggles and crises? Withdraw support for 3 more MPs
× RELATED இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ்...